விடுதலைப் போராட்ட வரலாற்றை இளைய தலைமுறைக்கு ஊட்டவேண்டும் : தியாகி லட்சுமிகாந்தன் பாரதி..!
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடைபெற்ற நூல் முன்னோட்டக் கூட்டத்தில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேசுகிறார். உடன் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளார்.
விடுதலைப் போராட்ட வரலாற்றை தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைப்பதோடு அதற்கேற்ற உணர்ச்சியுடன் வெளிப்படுத்த வேண்டும் என்று தியாகி லட்சுமிகாந்தன் பாரதி தெரிவித்தார்.
இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டை முன்னிட்டு, ஸ்டாலின் குணசேகரன் ‘ தினமணி ‘ நாளிதழில் எழுதி வந்த ‘ தமிழக தியாக தீபங்கள் ’ என்ற நெடுந்தொடர் ஒரு நூலாக விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்நூல் பற்றிய முன்னோட்டக் கூட்டம் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில், ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள பாரதி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் பொதுச்செயலாளர் திருப்பூர் நடராஜன் தலைமை வகித்தார். எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோவை ராஜாமணி வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியரும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான ஸ்டாலின் குணசேகரன் நூல் அறிமுகவுரை ஆற்றினார்.
சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி சிறப்புரை ஆற்றினார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது உண்மை ஆதாரங்களையும் புள்ளி விவரங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதோடு உயிரோட்டமானதாகவும் உணர்ச்சியூட்டத்தக்கதாகவும் எழுதப்பட வேண்டும்.
அத்தகைய உயிர்ப்புள்ள தியாக வரலாறு பள்ளி மாணவர்களுக்கு முறையாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு மாணவர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிய வைப்பதற்கு பள்ளி நிர்வாகமும் தலைமையாசிரியர்களும் ஆசிரியப் பெருமக்களும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
இந்தத் தியாக வரலாறு வெறும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்லாது எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கு அடித்தளமிடுவதாகவும் இருக்க வேண்டும். காந்தியக் கொள்கைகளும் , எத்தகைய தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரம் பெற்றுள்ளது என்ற உண்மை வரலாறும் அடுத்த தலைமுறைக்கு முழுமையாகத் தெரிவிக்கப்படுமென்றால் அவற்றை உள்வாங்கிய அத்தகைய இளைஞர்கள் பொறுப்புமிக்க குடிமக்களாக உருவெடுப்பார்கள்.
பொதுவாக புத்தகங்கள் தகவல்களைத் திரட்டித் தருவதாக மட்டுமல்லாமல் தேசபக்தியை ஊட்டுவதாகவும் சமூகச் சிந்தனையை இளைஞர்களின் இதயங்களில் விதைப்பதாகவும் இருக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைக்கும் வல்லமை சில நூல்களுக்கு உண்டு. இத்தகைய உயிரோட்டமான வரலாற்றைச் சொல்லும் போது வரலாற்று ஆதாரங்களுக்குக் கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவம் அவற்றைச் சொல்லும் விதத்திற்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும், என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மனைவிமார்கள் மற்றும் வாரிசுகள், ஆசிரியர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். முடிவில், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் மாநிலச் செயலாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu