ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தம்
ஈரோட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம் முன்பு, தடுப்பூசி இருப்பு இல்லை என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முதலில் 100 மையங்களிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் போடப்பட்டு வந்தன. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கியதால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 7ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், 7 நாட்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை. அடன் பின்னர், 13,400 கோவிஷில்டு தடுப்பூசி வந்ததை அடுத்து, நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. அதிகாலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். ஒரு மையத்திற்கு 200 பேர் அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.
இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் இன்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த தடுப்பூசி போடப்படும் மையங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தெரியாததால் இன்று அதிகாலை முதலே வழக்கம்போல் மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். பின்னர் அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர். பாதிப்பு அதிகமுள்ள மாவட்டம் என்ற முன்னுரிமை அடிப்படையில், ஈரோட்டிற்கு தடுப்பூசிகள் அதிக அளவு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu