வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!
X

ஈரோடு அக்ரஹாரம் அருகேயுள்ள நஞ்சப்பா நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு நிவாரண பொருட்களை சொந்த செலவில் வழங்கிய இன்ஸ்பெக்டர் கோபிநாத்.

ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஈரோடு அக்ரஹாரம் அருகேயுள்ள நஞ்சப்பா நகரைச் சேர்ந்தவர் சபீரா. கடந்த சில ஆண்டுகளாக அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறார். அத்துடன், தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நோய்ப்பரவல் அச்சம் காரணமாக வீடுகளில் அந்நிய நபர்களை அனுமதிக்க பலரும் தயங்கி, மறுத்து வருகின்றனர். இதனால் சபீராவால், கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கு சென்று பணியாற்ற முடியவில்லை. இதனால், அவருக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு குடும்பச் செலவுகளை செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் கருங்கல்பாளையம் காவல்நிலையத்திற்கு சென்ற சபீரா, தனக்கு உதவி செய்யமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அவரின் சூழலை அக்கறையோடு விசாரித்த கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் கோபிநாத், தனது சொந்த பணத்தில் இருந்து அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையையும், 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகளைக் கொண்ட தொகுப்பு பைகளை வழங்கினார்.

காவல்நிலையம் என்றால் கண்டிப்பு, கெடுபிடி, காவல்துறையினர் கடுமையாக இருப்பார்கள் என்று நினைத்துச் சென்ற சபீராவுக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் மனிதாபிமானச் செயலை பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர். இன்ஸ்பெக்டருக்கு, சபீராவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!