நாளை முழு ஊரடங்கு: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நாளை முழு ஊரடங்கு: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
X
நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், ஈரோட்டில் இன்று மளிகை கடைகள்,காய்கறி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் நேதாஜி பெரிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50 -க்கும் மேற்பட்ட பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலை சில்லறை வியாபாரம் நடைபெறும். சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே காட்சி அளிக்கும்.

இந்நிலையில், நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், இன்று காலை முதலே வ.உ.சி. பூங்காப்பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதேபோல் மொத்த வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தனர்.

காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு நுழைவாயிலில் கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து வேண்டிய காய்கறிகளை வாங்கி சென்றனர்.

காய்கறி மார்க்கெட் பகுதியில் நாளை கடைகள் திறந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்தனர். இதேபோல் மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!