அந்தியூர் காட்டுப் பகுதியில் வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.. தப்பியோடிய வேட்டைக் கும்பல்..

அந்தியூர் காட்டுப் பகுதியில் வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.. தப்பியோடிய வேட்டைக் கும்பல்..
X

கைது செய்யப்பட்ட குமார்.

Anthiyur Forest-ஈரோடு மாவட்டம், அந்தியூர் காட்டுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வேட்டைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார்.

Anthiyur Forest-ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதி, சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட, பாலாறு பீட், வாளங்குழி பள்ளம் என்ற இடத்தில் துப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 9 பேர் நள்ளிரவு அந்தப் பகுதிக்கு சென்றனர்.

அந்தப் பகுதியில் 5 பேர் கொண்ட வேட்டை கும்பல் ஒன்று வனப்பகுதிக்குள் நுழைந்து சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையெடுத்து, அங்கு மறைந்திருந்த வனத்துறையினர் வேட்டைக்கும்பலைப் பார்த்து நிற்கும்படி எச்சரித்தனர்.

ஆனால், வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி வேட்டை கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் வனத்துறையினரை நோக்கி சுட்டனராம். வனத்துறையினர் பாறையின் பின்புறம் நின்று இருந்ததால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.‌

தொடர்ந்து, வனத்துறையினர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் தரையை நோக்கி சுட்டு எச்சரித்ததால், வேட்டைக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இருப்பினும், அந்தக் கும்பலில் இருந்த சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த குமார் (வயது 40) என்பவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தப்பி ஓடியவர்கள் கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்கிற காரவடையான்,‌ காமராஜ், செட்டிபட்டியைச் சேர்ந்த பச்சைக் கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்துமேட்டூரை சேர்ந்த ரவி என்பதும் தெரியவந்தது.

அவர்கள் அனைவரும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளுடன் மான்களை வேட்டையாட வனப்பகுதிக்குள் நுழைந்ததும் வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அந்த கும்பலில் தலைவனாக ராஜா என்கிற காரவடையான் இருந்ததும், அவர் ஏற்கெனவே பல வன குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குமாரை சம்பவ பகுதிக்கு அழைத்துச் சென்ற வனத்துறையினர் அங்கிருந்த கரி மருந்து, பால்ரஸ் குண்டுகள் மற்றும் மான் கறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட குமாரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பியோடிய நான்கு பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, இதே ஐந்து பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கர்நாடக வனப்பகுதியில் உள்ள மத்திய மரத்தூர் என்ற இடத்தில் வன விலங்குகளை வேட்டையாடி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரு மாநில எல்லையில் வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி வேட்டைக்காரர் ஒருவரை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!