ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை

பைல் படம்
ஈரோட்டில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு மீண்டும் துவங்கிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வருகையால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் வளாகத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை கூடும். இது தவிர இதர நாட்களில் தினசரி சந்தையும் நடந்து வருகிறது. இந்த ஜவுளி சந்தையை ஒழுங்குப்படுத்திட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் 4 தளங்களுடன் கட்டப்பட்டது.
இந்த வணிக வளாகம் அருகே தற்காலிக ஜவுளி சந்தையும் மாநகராட்சி அனுமதியுடன் செயல்பட்டது. இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக ஜவுளி சந்தையை அகற்றிட உத்தரவிட்டது. இதன்பேரில், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக ஜவுளி சந்தை கடைகளை இடித்து அப்புறப்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, டிசம்பர் 31ம் தேதி வரை கடை அமைத்துக்கொள்ள காலஅவகாசம் பெற்றனர்.
இந்த உத்தரவின் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் அகற்றப்பட்ட கடைகளின் பொருட்களை வியாபாரிகளிடம் வழங்கியது. இதன்பேரில், அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடை அமைக்கும் பணியில் கடந்த 40 நாட்களாக வியாபாரிகள் ஈடுபட்டனர். இதனால், ஒன்றரை மாதங்களாக வாரந்திர ஜவுளி சந்தையும், தினசரி சந்தையும் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த வாரம் முதல் ஜவுளி வணிக வளாகத்தின் அருகே அதாவது பழைய இடத்திலேயே மீண்டும் ஜவுளி சந்தை அதே பொலிவுடன் செயல்பட துவங்கியது. கர்நாடகா மாநில தசரா பண்டிகையை முன்னிட்டு அனைத்து விதமான ஜவுளி ரகங்களையும் விற்பனைக்கு குவித்திருந்தனர். ஜவுளி ரகங்களை வாங்க கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதேபோல் சில்லரை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இந்த வாரம் தான் ஜவுளி சந்தை கூடியது. தசரா பண்டிகை விற்பனை துவங்கியுள்ளது. இதில், இந்த வாரம் மொத்த விற்பனை 25 சதவீதமும், சில்லரை விற்பனை 30 சதவீதமும் நடந்தது. தீபாவளி பண்டிகை ஜவுளி கொள்முதல் செய்து விற்பனைக்கு தயராகி வருகிறோம். அடுத்த வாரம் முதல் தீபாவளி விற்பனையும் துவங்கி விடும். தற்போது, தீபாவளி ஆர்டர் பெற்று வருகிறோம். எங்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே கடை அமைத்து கொடுத்து உதவிய அமைச்சர் சு.முத்துசாமிக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் வியாபாரிகள் சார்பில் நன்றிறை தெரிவித்து கொள்கிறோம், என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu