பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் அமைச்சரிடம் முறையீடு
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி அளித்த முறையீட்டு மனு விவரம்:
பெருந்துறை பகுதி பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, பெருந்துறை சிப்காட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுத்த தங்களுக்கு, எமது பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல, சிப்காட்டிற்காக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரிய இழப்பீடு கிடைக்கப் பெறாமல் உள்ள அவல நிலைக்கும் தங்களால் விடிவும், தீர்வும் ஏற்படும் என்ற முழு நம்பிக்கையோடு, தங்களது மேலான தலையீடும், உரிய நடவடிக்கையும் கோரி இம்முறையீட்டை சமர்பிக்கிறோம். இது தொடர்பாக, ஏற்கனவே பார்வையில் காணும் முறையீட்டை தங்களுக்கு நேரில் சமர்பித்துள்ளோம்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை அரசாணை எண்: 91/91 நாள்:27-02-1991-ன் படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் ஈங்கூர் கிராமத்தில் 2709 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகையாக, தமிழ்நாடு அரசின் "டாசிட்" நிறுவனத்திற்கு நேரடிக் கிரயம் செய்து கொடுத்தவர்களுக்கு ஈங்கூர் கிராமத்தில் ஏக்கருக்கு காட்டுப் பூமிக்கு ரூ.60,000/-மும், தோட்டப் பூமிக்கு ரூ.1,20,000/-மும், பெருந்துறை கிராமத்தில் ஏக்கருக்கு காட்டுப் பூமிக்கு ரூ.1,50,000/-மும், தோட்டப் பூமிக்கு ரூ.2,00,000/-மும் அரசால் வழங்கப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் அரசு அறிவித்த கால வரம்பிற்குள் "டாசிட்" நிறுவனத்திற்கு நேரடிக் கிரயம் செய்து கொடுக்க இயலாத சுமார் 100 குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட சுமார் 200 ஏக்கர் நிலத்திற்கு சந்தை மதிப்பு (Market Value) தொகையாக, பெருந்துறை கிராமத்தில் ஏக்கருக்கு ரூ.34,100/- (ஹெக்டேருக்கு ரூ. 84,124/-) வீதமும், ஈங்கூர் கிராமத்தில் ஏக்கருக்கு ரூ.29,700/- (ஹெக்டேருக்கு ரூ.73,359/-) வீதமும் மற்றும் கருணைத் தொகையாக (Solatium) சந்தை மதிப்பில் 30% தொகையும், நிலமெடுப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்ட நாளில் இருந்து அவார்டு தேதி வரையான காலத்திற்கு 12% வட்டியும் சேர்த்து மொத்தமாக ஏக்கருக்கு சுமார் ரூ.49,000/- முதல் சுமார் ரூ.56,000/- வரையான இழப்பீட்டுத் தொகையை மட்டுமே, நீதி மன்றத்தில் செலுத்திவிட்டு, 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழான தீர்வம் (Award) மூலம் அரசால் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நியாயமான, கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த நியாயமான முறையீட்டை ஏற்காமல் தமிழ்நாடு அரசும், சிப்காட் நிறுவனமும் எதிர்த்து வழக்கு நடத்தியது. பல ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு மாவட்ட நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புப்படியான இழப்பீட்டுத் தொகையையும் ஏற்க மறுத்து உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இதில், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த ரங்கப்ப கவுண்டர் மகன்கள் சென்னிமலைக் கவுண்டர், செல்லப்பகவுண்டர் மற்றும் ரங்கசாமி கவுண்டர் வகையறாக்கள் தொடர்ந்த வழக்கில் (LAOP:15/2003) பல்லாண்டுகள் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் ஏக்கருக்கு ரூ.2,10,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரம்) இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும், இதில் 30% தொகையை கருணைத் தொகையாக வழங்க வேண்டும் என்றும், அத்துடன் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றம் கடந்த 06-06-2006-ல் உத்தரவிட்டது.
ஆனால், தமிழக அரசும், சிப்காட் நிறுவனமும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தன.இம் மேல்முறையீட்டு வழக்கில் (A.S. No:153/2009) மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் பல்லாண்டுகள் விசாரணைக்கு பின்னர் அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும், மாவட்ட நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியும் கடந்த 21-02-2020 அன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், மேற்கண்ட உயர் நீதிமன்ற தீர்ப்புப் படியான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் சிப்காட் நிறுவனம் ஆண்டுக்கணக்கில் காலந்தாழ்த்தி வருகிறது. இதேபோல், ஈங்கூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு கோரி சென்னை, உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்குகளில் ஏக்கருக்கு ரூ.2,50,000/- , ரூ.2,16,500/- ,ரூ.2,00,000/- , ரூ.1,80,000/- என நான்கு விதமான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சிப்காட் நிறுவனம் நீதிமன்ற தீர்ப்புப்படியான தொகைகளை முழுமையாக செலுத்தாமல் பகுதி மட்டும் செலுத்திவிட்டு காலம் தாழ்த்தி வருகிறது.
அதேசமயத்தில், சிப்காட் நிறுவனம் ஒதுக்கீடு செய்யும் நிலத்திற்கு தற்போது தொழில் முனைவோரிடம் ஏக்கருக்கு ரூ.67,00,000/- (ரூபாய் அறுபத்தி ஏழு லட்சம்) வீதமும், வணிக நோக்கிலான நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ1,34,00,000/- (ரூபாய் ஒரு கோடியே முப்பத்தி நான்கு லட்சம்) வீதமும் வசூலித்து வருகிறது. ஆனால், நில உரிமையாளர்களுக்கு நீதி மன்றத் தீர்ப்புப்படியான குறைந்தபட்ச இழப்பீட்டைக் கூட வழங்க மறுத்து வருகிறது. இது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று கருதுகிறோம்.
ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புப் படியான இழப்பீட்டுத் தொகைகளை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும், நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்துள்ள பல வழக்குகள் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் அறியாமையின் காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் நீதி மன்றத்தில் குறித்த காலத்திற்குள் முறையீடு செய்யாததால், தற்போது வழக்கு தொடர்வதற்கான காலவரம்பும் முடிந்து விட்டதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர்.
ஆகவே, தொழில் வளர்ச்சிக்காக தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரமாக விளங்கி வந்த விவசாய நிலங்களையும் இழந்து, அதற்குரிய இழப்பீடும் கிடைக்காமல் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் குடும்பத்தினருடன், தங்களது மேலான தலையீடும், நீதியும் கோரி, வரும் 27-12-2023 புதன் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெருந்துறை சிப்காட் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவும், உயர் நீதிமன்ற தீர்ப்புப்படியான அதிகபட்ச தொகையை இழப்பீடாக நிர்ணயித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu