ஈரோடு மீன் சந்தையில் மீன்கள் விலை சரிவு

வஞ்ஜிரம் (பைல் படம்)
ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை சரிவடைந்து வஞ்சரம் மீன் ஒரு கிலோ ரூ.650க்கு விற்பனையானது.
ஈரோடு ஈவிஎன் சாலையில் ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகறிது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு திருச்செந்தூர், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால், பெரும்பாலான இந்து மக்கள் அசைவம் தவிர்த்து விரதம் கடைபிடித்து வருகின்றனா். இதனால், ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மீன் மார்க்கெட்டிற்கு நேற்று 20 டன் மீன்கள் வரத்தாகி இருந்தது. வரத்து அதிகரித்ததாலும், புரட்டாசி மாதம் என்பதாலும் மீன்கள் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் கிலோவுக்கு ரூ.50 வரை சரிவடைந்து விற்பனையானது.
குறிப்பாக ரூ.1,000க்கு விற்பனையான வஞ்சரம் மீன், நேற்று ஒரு கிலோ ரூ.650க்கும், ரூ.750க்கு விற்கப்பட்ட விளா மீன் ரூ.450க்கும், ரூ.250க்கு விற்கப்பட்ட அயிலை மீன் ரூ.200க்கும், ரூ.450க்கு விற்கப்பட்ட தேங்காய் பாறை ரூ.400க்கும், ரூ.800க்கு விற்கப்பட்ட வெள்ளை வாவல் ரூ.650க்கும், ரூ.700க்கு விற்கப்பட்ட கருப்பு வாவல் ரூ.500க்கும், ரூ.700க்கு விற்கப்பட்ட இறால் ரூ.600க்கும் விற்பனையானது.
இதேபோல், இதர மீன்களான சங்கரா-ரூ.300, சீலா-ரூ.450, நண்டு-ரூ,400, உளி மீன்-ரூ.400, கடல் அவுரி-ரூ.400, மத்தி-ரூ.150, கொடுவா-ரூ.400, முறல்-ரூ.250, திருக்கை-ரூ.350, கிளி மீன்-ரூ.500, மதன-ரூ.400, ப்ளூ நண்டு-ரூ.650 ஆகிய விலைகளில் விற்பனையானது. புரட்டாசி மாதம் நிறைவடைந்ததும் மீண்டும் மீன்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu