காவிரி உபரிநீர் இணைப்பு கோரி ஆர்ப்பாட்டம்

காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாற்றை இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சரபங்கா, திருமணிமுத்தாறு, பொன்னியாறு மற்றும் கரைபோட்டான் ஆற்றில் இணைக்க வலியுறுத்தி, "காவிரி ஆற்றின் உபரி நீரால் தாகம் தீர்ப்போம்" இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்கத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் செல்வராஜ், நிதி செயலாளர் லோகநாதன், விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சினிமா இயக்குநர் விஜய் கிருஷ்ணராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். காவிரியில் வரும் உபரிநீரை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப காவிரி, திருமணி முத்தாறு, பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அனைத்து விவசாயிகளும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேட்டூர் அணை உபரிநீரை, காவிரி கிராஸ் வழியாக சின்னப்பம்பட்டி கொண்டுவந்து, சரபங்கா ஆற்றில் ஒரு பகுதியை விட்டு, மீதியை மங்களம் ஏரியில் விட்டு, அங்கிருந்து காளிப்பட்டி வழியாக திருமணி முத்தாற்றில் விட வேண்டும் என்றும், அதன் மூலம் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள அனைத்து ஏரிகளையும் காவிரி உபரிநீரை கொண்டு நிரப்பினால், கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்பதுடன், குடிநீர் தேவைக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu