ஈரோடு மாவட்டத்தில் 4-ம் கட்ட முகாமில் 57 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 4-வது கட்டமாக 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 12, 19 மற்றும் 26-ந் தேதிகளில் 3 கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நேற்று 4-வது கட்டமாக தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நேற்று, மாநகராட்சி பகுதியில் 64 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 557 இடங்களிலும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து முதல் தவணை மற்றும் 2-ம் தவணை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனா். ஈரோடு மாநகராட்சியில் 21 ஆயிரத்து 900 பேருக்கும், மாவட்டம் முழுவதும் 95 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் பணியில் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு மையம் மூலம் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடந்தது. மேலும் 4 சிறப்பு மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. மொத்தம் 557 இடங்களில் 56 ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Tags

Next Story