ஈரோட்டில் ஓராண்டுக்குப் பின்னர் கொரோனாவுக்கு முதியவர் மரணம்
(பைல் படம்)
ஈரோட்டில் ஒரு வருடத்திற்கு பிறகு கொரோனாவுக்கு முதியவர் உயிரழந்தார்
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கொரோனா 2-வது அலையில் ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. முதியவர்கள் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டது. முககவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக கடைபிடிக்கப்பட்டது
இது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பு ஏற்படாமல் இருந்து வந்தது.
மேலும் 8 பேருக்கு தொற்று: இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள் ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் முதல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி, மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை கொரோனாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது. 89 வயதான அந்த முதியவர் கடந்த 20-ந் தேதி சளி, காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்புடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 21-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த முதியவர் கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவருக்கு கொரோனா பாதிப்புடன் சில இணை நோய்களும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu