ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்

பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிகர சாகுபடி பரப்பை 11.75 லட்சம் ஹெக்டேராக உயர்த்தும் வகையில், 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி சாகுபடிக்கு கொண்டு வருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தரிசு நிலத்தொகுப்பில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக உருவாக்கி, தொகுப்பு நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில் குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப்பயிர்களும், ஊடுபயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கும் இத்திட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக தேர்வாகியுள்ள 1,997 கிராம பஞ்சாயத்துகளிலும் இப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.227.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 42 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: கலைஞர் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 42 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேளாண் துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு, நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவி பயிர் சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu