ஈரோடு மாவட்டத்தில் 6 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு..!
அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள்.
கீழ்பவானி பாசனப் பகுதிகளில் 6 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
அரசு விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் விளைவித்த நெல்லினை நேரடியாக அரசே கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஈரோடு மண்டலத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
2023-2024 பருவத்திற்கு கீழ்பவானி பாசனப் பகுதிகளில் முதற்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 2ம் தேதி (நேற்று) முதல் திறந்து செயல்பட அனுமதி வழங்கியுள்ளதன் அடிப்படையில் நசியனூர், நாதிபாளையம், கூகலூர், புதுவள்ளியம்பாளையம், அளுக்குளி மற்றும் கலிங்கியம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும், நெல் அறுவடையின் அடிப்படையில் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது. மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை ஏ ரகம் குவிண்டால் ரூ. 2,310, பொது ரகம் ரூ. 2,265 என அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் நெல்லினை இ- கொள்முதல் முறையில் விவசாயின் கைரேகை பதிவு செய்து, கொள்முதல் செய்யப்பட்டதற்குண்டான தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இசிஎஸ் அடிப்படையில் செலுத்தப்படும்.
எனவே, விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லினை விற்பனை செய்ய கிராம நிர்வாக அலுவலரின் சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் நேரில் வந்து கைரேகை பதிவு செய்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu