நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த ஈரோடு மாநகர கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி வார்டு பகுதிகளில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது. மேயர் நாகரத்தினம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறளை வாசித்து அதற்கான விளக்கத்தை எடுத்து கூறினார். அதைத் தொடர்ந்து 28 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள குறைகள் குறித்து விளக்கி பேசினர். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா பேசும்போது, ஈரோடு மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதையாத்திரை வந்த பாஜக மாநில தலைவர் மத்திய அரசு நிதி மூலம் நமது மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 54 பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்று பேசினார். அதுபோல் நமது மாநகராட்சியில் 54 பணிகள் நடைபெற்று உள்ளதா? அல்லது நடைபெற்று வருகிறதா? என்று விளக்கம் அளிக்க வேண்டும்.
எனது வார்டில் 17 சாலைகள் புதிதாக அமைக்க ஆர்டர் வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வாய்க்கால் ரோடு சாலை போடுவதற்கு துவக்க விழா நடைபெற்றது. அந்த சாலை கூட இரண்டு மாதத்திற்கு மேல் ஆகியும் போடவில்லை. மேலும், குந்தவை வீதியில் சாக்கடை பணிகளை நாங்களே செய்து முடித்தோம். பலமுறை கேட்டும் இதுவரை போடவில்லை என்றார். இதையடுத்து மற்ற கவுன்சிலர்களும் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளதாகவும், சாக்கடை பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள், கொங்குநாடு முன்னேற்ற கழக கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu