ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள்.
குறைந்த பட்ச ஊதியத்தை வழங்கக்கோரி ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட 132 ஒப்பந்த பணியாளர்களுக்கு வார விடுமுறை, தேசிய, பண்டிகை நாட்கள் விடுமுறை, சட்டப்படியான 20 நாட்களுக்கு ஒருநாள் வீதம் வழங்கப்பட வேண்டிய ஈட்டிய விடுப்பு, மாதத்திற்கு ஒருநாள் தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனசாக குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட உறுப்பினர் அட்டை முறையாக வழங்கப்பட வேண்டும். சம்பள விபரப் பட்டியலையும், மாத வருகைப்பதிவு விபரத்தையும் அறிவிப்பு பலகையில் பகிரங்கமாக ஒட்டப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் திருஞானசம்பந்தம், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, மாலை 4 மணி அளவில் தூய்மைப்பணி யாளர்கள் பணிக்கு திரும்பினர். இதனையடுத்து, மருத்துவமனையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu