பவானி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் அமைச்சர் முத்துசாமியிடம் மனு
அமைச்சர் முத்துசாமியிடம் பவானி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மனு அளித்தனர்.
பவானி புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்க வேண்டி, அமைச்சர் முத்துசாமியிடம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூர் பிரிவு காவேரிக் கரையோரத்தில், பழைய வார சந்தை சாலை பகுதி ரூ.1.30 கோடி செலவில் புதிய தினசரி மார்க்கெட் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு தரப்பினர் பழைய இடத்தில் சந்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் புதிய பேருந்து நிலையம் அருகே காய்கறி சந்தை அமைக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பழைய இடத்தில் புதியதாக காய்கறி மார்க்கெட் அமைப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கண்டித்தும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய காய்கறி மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பவானி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் அமைச்சர் முத்துசாமியிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், பவானி வாரச்சந்தை மைதானத்தில் தற்போது செயல்பட்டு வரும் மார்க்கெட் அந்தியூர் மேட்டூர் பிரிவு மெயின் சாலையில் இருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் இரு பக்கமும் உள்ள சாலைகளும் மிகக் குறுகிய அகலம் கொண்ட சாலைகளாகும்.
இதன் காரணமாக தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு பொருள்கள் கொண்டு வரவும் எடுத்துச் செல்லவும் டெம்போ லாரி வரவும், சிறு மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. சரியான சாலை வசதி இல்லாததாலும் ஒதுக்கு புறமாக உள்ளதாலும் மயானம் அருகில் இருப்பதாலும் வியாபாரிகள் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வர மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் தற்போது உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் 236 சிறு வியாபாரிகள் காய்கனி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது உள்ள தினசரி காய்கனி மார்க்கெட் வளாகமானது சிறிய இடம் ஆகும்.
இதில், புதிதாக காய்கறி மார்க்கெட் வளாகம் கட்டினால் தற்போது வியாபாரம் செய்து வரும் 236 வியாபாரிகள் அனைவருக்கும் இடம் கிடைக்காது. இதனால் சுமார் 100 சிறு ஏழை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சிறு வியாபாரிகளின் நலன் கருதியும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதியும் தற்போது உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் மார்க்கெட் வியாபாரிகளுக்கு மார்க்கெட் வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu