ஜப்பானில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பாரதி விழா..!

ஜப்பானில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பாரதி விழா..!

ஜப்பானில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் பாரதி விழா நடைபெற்றது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் நாட்டு கிளை சார்பில், பாரதி விழா அண்மையில் நடைபெற்றது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் நாட்டின் கிளை சார்பில், பாரதி விழா அண்மையில் நடைபெற்றது.

சமீபத்தில் மக்கள் சிந்தனைப் பேரவையின் கிளை ஜப்பான் நாட்டில் துவங்கப்பட்டது. அதன் முதல் நிகழ்ச்சியாக பாரதி விழா ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரிலுள்ள 'ஷிந்தென் சமூகக் கூடம்' என்ற அரங்கில் கடந்த டிசம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் நாட்டின் நேரப்படி மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை ஆலோசகர் கமலக்கண்ணன் விழாவுக்குத் தலைமையேற்றார். பேரவையின் ஜப்பான் கிளைத் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்புரையாற்றினார். பேரவையின் நிறுவனரும் தலைவருமான ஸ்டாலின் குணசேகரன் இணைய வழியாக 'பேரவையின் நோக்கமும் தேவையும் ' என்ற தலைப்பில் விளக்கவுரை ஆற்றினார்.

அப்போது, அவர் கூறுகையில், ஜப்பான் நாட்டிற்கும் தமிழகத்திற்குமான நட்புறவுப் பாலமாக அங்கு தொடங்கப்பட்டுள்ள பேரவையின் கிளை திகழும் என்றும் தலைசிறந்த ஜப்பானிய மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வரும் பணியையும் பேரவை பொறுப் பேற்றுச் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் பணியை மக்கள் சிந்தனைப் பேரவை மேற்கொள்ளும் என்றார்.

பாரதியின் தாய் மாமாவின் பேத்தியான உமா சுகவனம், கொள்ளுப்பேத்தி ஜெயஸ்ரீ சுப்ரமணியம் ஆகியோர் இணைய வழியாக வாழ்த்துரை வழங்கினர். இணைய வழி உரைகளைக் கேட்பதற்கு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜப்பான் தமிழ் ஆளுமைகள் கருத்துரை வழங்கினர்.

அசோக் 'பாரதி எனும் குறும்புக்காரக் குழந்தை ' என்ற தலைப்பிலும், ஆறுமுகம் 'வாழ்க்கைப் படிநிலைகளில் பாரதி ' என்ற தலைப்பிலும், செந்தில் குமார் 'பாரதியைக் கண்டடைதல் ' என்ற தலைப்பிலும், கோவிந்தராஜன் 'சேமமுற வேண்டுமெனில் ' என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். டோக்கியோ நகரில் பாரதி விழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்று கருத்துரையாளர்கள் தங்களது உரைகளில் தெரிவித்தனர்.

மேலும், ஜப்பான் நாட்டில் பயிலும் தமிழ் மாணவ மாணவியர் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதத்தில் பாரதியார் பாடல்களைப் பாடினர். பாரதி குறித்து சிற்றுரைகள் நிகழ்த்தினர். ஜப்பான் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழியை முறையாகக் கற்றுக் கொடுக்கும் சிறப்பாசிரியர்கள் சிலருக்கு இந்நிகழ்வில் பாராட்டு மடல்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, நடைபெற்ற பாரதி விழாவில் தனித்திறன்மிக்க மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டோக்கியோ நகரில் வாழும் தமிழ் அன்பர்கள், ஆர்வலர்கள் குடும்பம் குடும்பமாக இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றதால் அரங்கம் நிறைந்திருந்தது. முடிவில், பேரவையின் துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story