108 ஆம்புலன்ஸை அழைத்தால் தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது

108 ஆம்புலன்ஸை அழைத்தால் தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது
X

மாதிரி படம் 

அந்தியூர் பகுதியில் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் சம்பவ இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களின் மருத்துவ அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தி வருகிறது. இதற்காக இலவச எண்ணாக 108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளாலாம் என்றும் இதற்காக எந்தவொரு கட்டணமும் பொதுமக்கள் செலுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாகன விபத்து ஏற்பட்டாலே, அல்லது ஏதேனும் மருத்துவம் சார்ந்த அவசர தேவைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றாலே, பெரும்பாலானோர் 108 ஆம்புனஸ்க்கு போன் செய்கின்றனர். ஆனால், சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாக தனியார் ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்கு வந்து விடுவதாகவும், பின்னர் வேற வழியின்றி பணம் கொடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் நடப்பதாகவும், பெரும்பாலும் 108 ஆம்புலன்ஸ் போன் செய்து வரசொன்னால் கூட தாமதமாகதான் வருவதாகவும் தனியார் ஆம்புலன்ஸிற்கு போன் செய்யாமலே அவை வந்து விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்,

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, தனியார் ஆம்புலன்ஸை யாரும் அழைப்பதில்லை. அவர்களுக்கு எவ்வாறு தகவல் தெரிகிறது?. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தியூரில் ஒரே ஒரு 108 ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளதாகவும் மேலும் அதனை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து 108 ஆம்புலன்ஸ் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது, தாங்கள் அவ்வாறு எந்த ஒரு கையூட்டும் பெற்றுக்கொண்டு தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். குற்றச்சாட்டு குறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பொதுமக்களின் நலனை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!