2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
பைல் படம்
அந்தியூர் போலீஸ் நிலையத்தில் 1 இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 15 ஏட்டுகள், 10 முதன்மை காவலர்கள், 2 போலீசார் என மொத்தம் 33 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இந்நிலையில் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வேன் டிரைவராக பணிபுரியும் செல்வம் என்பவருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதன்மை காவலர் ரமேஷ் சந்திரன், பெண் தலைமை காவலர் சகுந்தலா, முதல்நிலை பெண் காவலர் உதயகுமாரி, தனிப்பிரிவு தலைமை காவலர் மெய்யழகன், காவலர் சிவகுமார் உள்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தியூர் போலீஸ் நிலையத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் அங்கு கிருமி நாசினி தெளித்தனர்.இதையடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மற்ற போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu