மலைவாழ் மக்களுக்காக 10 கி.மீ., தூரம் டிராக்டரில் சென்ற அந்தியூர் எம்எல்ஏ
மருத்துவ முகாமினை துவக்கி வைப்பதற்காக 10 கி.மீ., தூரம் டிராக்டரில் அமர்ந்து சென்ற அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
கத்திரிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை துவக்கி வைப்பதற்காக அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் 10 கி.மீ., தூரம் கரடுமுரடான மலைப்பாதையில் டிராக்டரில் சென்றார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1,200 அடி உயரம் அமைந்துள்ள கத்திரிமலையில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 270க்கும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இம்மலைவாழ் பயன்பெறும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் 10கி.மீ., தூரம் டிராக்டரில் அமர்ந்து கரடுமுரடான மலைப்பாதையில் சென்று மருத்துவ முகாமை சனிக்கிழமை (இன்று) தொடங்கி வைத்தார்.
இம்முகாமில், 250க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனர். இதில் முழு உடல் பரிசோதனை, பொது மருத்துவம், காய்ச்சல், சளி, இருமல், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு உள்ளிட்டவைகளுக்கான சிகிச்சையும், இரத்த பரிசோதனையில் இரத்த வகைகள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈசிஜி, உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 19 வயது பெண்ணுக்கு இதய நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதேபோல், 13 வயது மாணவனுக்கு ஆட்டிசம் கண்டறியப்பட்டு ஈரோடு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மலைவாழ் மக்களுக்கு இரத்தசோகையை தவிர்க்க அனைத்து வகையான காய்கறிகளை உணவில் சேர்க்க ஆலோசனைகள் வழங்கி சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு ஆலோசனை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புன்னகை திட்டத்தின் மூலம் காணொளி காட்சி வாயிலாக 24மணி நேரமும் மருத்துவ ஆலோசனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், கண் பரிசோதகர், ஆய்வக நுட்புணர்கள் என 20க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுதப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், வட்டாசியர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் ஓய்வூதியம், ஆதார் அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, காட்டுப் பட்டா வேண்டி மனுக்களை பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை, மின்சாரத் துறை, காவல் துறை, வனத்துறை, மருத்துவத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu