அந்தியூரில் ரூ.9.97 கோடியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

அந்தியூரில் ரூ.9.97 கோடியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

அந்தியூர் வார சந்தை வளாகத்தில், சந்தை மேம்பாடு செய்யும் பணியினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அந்தியூர் பகுதிகளில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட அந்தியூர் - அத்தாணி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் பணியினையும் மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அந்தியூர் வார சந்தை வளாகத்தில் ரூ.5.74 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணியினையும், அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 8, காந்திஜி சாலை, தவிட்டுப்பாளையம் மயானத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.40 மதிப்பீட்டில் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதையும், அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பொது நிதி திட்டத்தின் கீழ், ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் சத்துணவு மையம் அமைக்கப்பட்டுள்ளதையும், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தொடர்ந்து, அந்தியூர் அரசு மருத்துவமனையினை நேரில் சென்ற பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.முன்னதாக, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு, அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ஆனந்தன், உதவிப்பொறியாளர் சிவபிரசாத், அந்தியூர் வட்டாட்சியர் பெரியசாமி, அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு