ஈரோட்டில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மின்வாரிய அதிகாரிகள்
ஈரோட்டில் மின் இணைப்பு திறனை அதிகரிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு ராசாம்பாளையம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் சண்முசுந்தரம் (வயது 53). விசைத்தறி உரிமையாளர். இவருக்கு சொந்தமான கிடங்கு ராசாம்பாளையம் சாலை எஸ்எஸ்பி நகரில் உள்ளது. அந்த கிடங்கில் ஏற்கெனவே இருந்த 10 ஹெச்.பி.க்கான மின் திறனை 80 ஹெச்.பி.க்கு உயர்த்தி தர வேண்டும் என ஈரோடு திருநகர் காலனியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்தை சண்முகசுந்தரம் ஆன்லைனில் செலுத்தியுள்ளார்.
இந்தநிலையில் உதவி பொறியாளர் சிவக்குமார், விசைத்தறி உரிமையாளர் சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டு மின் இணைப்பு திறனை அதிகரித்து வழங்க வேண்டும் என்றால் உதவி செயற்பொறியாளர் சண்முகத்துக்கு ரூ.25 ஆயிரம், உயர் அதிகாரி ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகசுந்தரம் இதுகுறித்து ஈரோடு வஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை சண்முகசுந்தரம் எடுத்து கொண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் சிவகுமார் ஆகியோர் இருந்தனர். உள்ளே சென்ற சண்முகசுந்தரம், சண்முகத்திடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, அங்கு வளாகத்தில் மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேஷ், ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சண்முகம், சிவகுமார் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில், லஞ்சம் பெற்று மின் வாரிய அதிகாரிகள் இருவர் கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu