பொள்ளாச்சி அருகே காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி அருகே காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப் படவில்லை என கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாருக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், அங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் குடி தண்ணீர் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இதனால் குடிக்கவும், அன்றாட பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட வேண்டிய நிலை இருப்பதாக கூறிய அவர்கள், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai marketing future