ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு ; விவசாயிகள் மகிழ்ச்சி
ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆழியார் அணை அமைந்துள்ளது. ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை பரம்பிக்குளம் - ஆழியார் பாசன திட்டத்தில் மிக முக்கியமான அணையாக உள்ளது.
இந்த அணையில் இருந்து ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தேவைக்காகவும் பாசனத்திற்காகவும் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. ஆழியார் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பல ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். இந்த நிலையில் பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின் ஆழியார் புதிய பாசனம் 'ஆ’ மண்டல பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உயிர் தண்ணீர் தேவைக்காக ஆண்டுதோறும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன்படி பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை உள்ள 40 நாட்களில் தகுந்த இடைவெளி விட்டு 19 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற அடிப்படையில், மொத்தம் 610 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனை அடுத்து ஆழியார் அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu