பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்

பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
X

வாழைகள் சேதம்

வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நேற்று நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சி பகுதியிலும் கோடை மழை பெய்தது.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்த நிலையில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து, கனமழை பொழிந்ததால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

கடந்த ஆறு மாத காலமாக கடும் வறட்சி நிலவி வந்த சூழலில் பல லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி பயிரிட்ட வாழை மரங்களை காப்பாற்றிய நிலையில், சூறை காற்றால் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!