பொள்ளாச்சி அருகே பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்

பொள்ளாச்சி அருகே பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்
X

கவுன்சிலர்கள் போராட்டம்

கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும், துணைத் தலைவராக கிருஷ்ணவேணியும் உள்ளனர். திமுகவை சேர்ந்தவர்கள் இந்த பேரூராட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அதிமுக, காங்கிரஸ், சுயேச்சை கவுன்சிலர்களும் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், பேரூராட்சி அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த அவசர கூட்டத்திற்கு இன்று காலை கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பத்துக்கு, மேற்பட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் கதவை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று நடந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களது கையெழுத்துக்களை போலியாக போட்டதாகவும், மீண்டும் அவற்றை அழித்து விட்டதாகவும் கூறி கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் தேர்தல் அறிவிற்ப்பிற்கு முன்பாக நடத்த வேண்டும் என இந்த கூட்டத்தை அவசர அவசரமாக நடத்தி இருப்பதாகவும், முறையாக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai automation in agriculture