குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய பள்ளி வாகனம்
குழியில் சிக்கிய பள்ளி வாகனம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டூர் பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான இடங்களில் 2.0 குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் இன்று காலை கோட்டூர் ரெயின்போ காலனி அருகே 30-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆர்.கே.ஆர் ஞானோதயா மேல்நிலைப்பள்ளி பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தில் திரும்பும் பொழுது குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிக்குள், வேனின் பின் சக்கரம் மாட்டி இடது புறம் சாய்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் பயந்து அலறியுள்ளனர்.
பள்ளி குழந்தைகளின் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளிக் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியோடு பள்ளி வாகனம் குழியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, 2.0 குடிநீர் திட்டப் பணிக்காக குழிகள் தோண்டி விட்டு சரியாக மூடாததால் தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும், விரைவாக இந்த பணிகளை சரிவர செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu