பேரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது..!

பேரூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது..!
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்து இருந்த 27 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையில் பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள நொய்யல் படித்துறையில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னோர்களுக்கும் திதி கொடுப்பது வழக்கம். படித்துறை அருகே வேடபட்டி செல்லும் மெயின் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது.

இக்கடையில் கடந்த சில வாரங்களாக அதிகாலையில் மது விற்பனை ஜோராக நடந்து வருவதாக புகார் எழுந்தது. குறிப்பாக டாஸ்மாக் கடையில் இருந்து ஊழியர்கள் மூலம் நொய்யல் படித்துறை அருகே தோட்டங்களில், ஆறு கரையோரங்களில் உள்ள மறைவான இடத்தில் வைத்தும் கூடுதல் விலைக்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை நடந்தது.

இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில் பேரூர் டி.எஸ்.பி முரளி (பொறுப்பு) உத்தரவின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் துறையினர், பேரூர் அருகே நொய்யல் படித்துறை ஆற்றோரப் பகுதிகளில் சோதனை செய்த போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.

பேரூர் நொய்யல் படித்துறை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடையின் பார் உரிமையாளர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகநாதன் (வயது 43) மற்றும் பார் ஊழியர் உதயகுமார் (வயது 53) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்து இருந்த 27 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, பேரூர் டி.எஸ்.பி முரளி (பொறுப்பு) யிடம் கேட்டபோது, அரசு அனுமதித்த நேரத்தை மீறி, சட்ட விரோதமாக கடையிலோ அல்லது வெளிப் பகுதியிலோ வைத்து மது விற்பனை நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதையும் மீறி தொடர்ந்து, சட்ட விரோத மது விற்பனைகள் நடப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பார் உரிமம் ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!