ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்

ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்
X

காட்டு யானை

யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை, மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வீட்டில் வைத்திருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களைச் சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரடிமடை, தீத்திபாளையம் பகுதிகளில் சுற்றி வரும் ஒற்றை ஆண் காட்டு யானை தனியாக உள்ள வீட்டின் கதவை உடைத்து அரிசியை சாப்பிட்டு வருகிறது. மேலும் அந்த ஒற்றை யானை கீழே தள்ளி விட்டதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஒற்றை யானை சனிக்கிழமை இரவு மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து கோவை வனச்சரத்திற்குட்பட்ட வேடப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எனினும் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை திடீரென மாயமானது. இதனை தொடர்ந்து இன்று காலை பேரூர் தமிழ் கல்லூரி அருகே ஒற்றை யானை நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, வனத்துறையினர் தேடி வந்த ஒற்றை யானை அங்கு நிற்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இரவு முழுவதும் வேடப்பட்டி, பேரூர் பகுதியில் சுற்றி வந்த யானை தற்போது வழி தவறி ஊருக்குள் நிற்கிறது இதனை உடனடியாக வனப் பகுதிக்குள் விரட்டினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

குடியிருப்புகள் அதிகமாகவும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவும் இருப்பதால் மாலை நேரத்தில் இந்த யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!