கோவையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடிய மாணவ, மாணவிகள்

கோவையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடிய மாணவ, மாணவிகள்
X

கோவை அருகே சூலூரில் பொங்கல் விழா கொண்டாடிய கல்லூரி மாணவ மாணவிகள்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை இன்னும் இரண்டு நாட்களில் வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்து கொண்டனர். புடவை அணிந்து வந்த மாணவியர் நடனமாடி, மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கொண்டாடினர். மாணவிகள் வண்ண கோல‌மிட்டு, கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உறியடித்தல், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதே போல நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாளை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுவதால் பெரும்பாலான பள்ளி கல்லூரிகளில் இன்று காலையே பொங்கலிட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. இதே போல் அரசு அலுவலகங்களிலும் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டு ஊழியர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!