கோவை வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா? - அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் சவால்

கோவை வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா? - அண்ணாமலைக்கு சிங்கை ராமச்சந்திரன் சவால்
X

கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

நான்பயப்படுவதாக நினைத்து விடக்கூடாது. அண்ணாமலை பயப்படுகிறார். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? என கேள்வி எழுப்பினார்

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சிங்கை ராமச்சந்திரன், கார்த்திக் அப்புசாமி, லோகேஷ் தமிழ்செல்வன் ஆகிய அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், “கரூரில் இருந்து ஒருவர் கோவைக்கு வந்து போட்டியிடுகிறார். அவர் திமுக மற்றும் திமுக வேட்பாளர் பெயரை சொல்கிறார். ஆனால் எனது பெயரை சொல்ல மறுக்கிறார். புரட்சி தலைவி வைத்த புரட்சி தலைவரின் பெயர் என்பதால் எனது பெயரை சொல்ல பயமா?

அண்ணாமலை கரூரில் நின்றால், டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் வந்து நிற்கிறார். ஒரு கரூர்காரர் ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வர இன்னொரு கரூர்காரரை ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என வாட்ஸ்அப்பில் வந்தது. அது உண்மையா‌ எனத் தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என எந்த மொழியிலும் பேச தயார். அண்ணாமலை பயப்படுகிறார். என்னை பயப்படுவதாக நினைத்து விடக்கூடாது. அவருக்கு சவால் விடுகிறேன். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? நேரம், இடத்தை குறித்து வாருங்கள். விவாதிக்க நான் தயார். அதிமுக தொண்டர்களின் உணர்வை புண்படுத்திய அண்ணாமலை, வேலுமணி கோட்டையில் வந்து நின்றால் ஜெயிக்க விட்டு விடுவோமா?” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!