விபத்தில் சிக்கிய மாணவர் ; காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கனிமொழி
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய கனிமொழி
திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு,குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், நேரடியாகச் சந்தித்து மனுக்களை பெற்றனர்.
இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூர்க்கு கனிமொழி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வரும் ராபின் என்ற மாணவன் லாரி ஒன்றில் எதிர்பாராத விதமாக மோதிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த கனிமொழி தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று அந்த மாணவரை பார்த்துள்ளார். அப்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, தி.மு.க. கட்சியை சார்ந்த ஒருவரின் வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கனிமொழி அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாணவரை சேர்த்து உள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் நிலையை கவனித்து தெரிவிக்குமாறு மருத்துவரிடம் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu