காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு
X

சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை அடுத்த இருகூர் பகுதியில் 51 சக்திபீடம் காமாட்சிபுரி ஆதினம் உள்ளது. இந்த காமாட்சிபுரி ஆதினமாக 55 வயதான சிவலிங்கேஸ்வர சுவாமிகள் என்பவர் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உயிரிழந்தார். இதையடுத்து சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் காமாட்சிபுரி ஆதினத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது. பின்னர் முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கியவர்களில் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் ஒருவர். கொரோனா காலகட்டத்தில் காமாட்சிபுரி ஆதின சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை அமைத்து இவர் பூஜை செய்தார். இது சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து கோயில்களுக்கும் சென்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என அவரது ஆதரவளார்கள் தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!