பீகாரில் இருந்து குழந்தைகளை வாங்கி வந்து விற்பனை செய்த கும்பல் கைது

பீகாரில் இருந்து குழந்தைகளை வாங்கி வந்து விற்பனை செய்த கும்பல் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள்

குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டவரிடம் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஜிம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயன், விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகியும் கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஹார்லிக்ஸ் தயாரிக்கும் கம்பெனியின் முன்புறமாக ஹோட்டல் கடை நடத்தி வரும் அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினரிடம் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. விவசாய வேலை செய்து வரும் விஜயன் தனக்கு குழந்தைகள் இல்லாததை பலரிடமும் சொல்லி வைத்து உள்ளார். அவரிடம் பழகிய அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினர் தங்கள் வசம் பிறந்து 15 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் உங்களுடைய பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறி உள்ளார்.

பின்னர் பீகாரில் இருந்த அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேக குமாரி ஆகியோர் கடந்த 20 தினங்களுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை சூலூர் கொண்டு வந்து அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து உள்ளனர். அவர்கள் ஏற்கனவே பேசியபடி விவசாயி விஜயன் குடும்பத்தாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் விலைக்கு விற்றுள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை செய்து குழந்தை கடத்தி வந்து விற்பனை செய்ததை உறுதி செய்தனர். பின்னர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். குழந்தையை விற்பனை செய்த அஞ்சலி, மகேஷ் குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஒரு குழந்தை பெண் குழந்தை மட்டுமின்றி, மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு 5 லட்சம் ரூபாய் விலை பேசி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தையை வாங்கிய விஜயனும் கைது செய்யப்பட்டார். மேலும் பீகாரில் இருந்த பூனம் தேவி மற்றும் மேகா குமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீகாரில் ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் 1,500 ரூபாய் கொடுத்து பிள்ளையை தாங்களே வளர்த்திக் கொள்வதாக கூறி எடுத்து வந்து கோவையில் விற்பனை செய்ததாக கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil