கோவை ஓணம் விழாவில் கத்தியை சுழற்றிய முன்னாள் கல்லூரி மாணவர் கைது

கோவை ஓணம் விழாவில் கத்தியை சுழற்றிய முன்னாள் கல்லூரி மாணவர் கைது
X

கையொடிந்த நிலையில் மாணவர் ரோகித்.

கோவையில் நடந்த ஓணம் விழாவில் கத்தியை சுழற்றிய முன்னாள் கல்லூரி மாணவரை போலீசார் கையொடிந்த நிலையில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரோகித் என்ற இளைஞர் திடீரென கத்தியை சுழற்றி மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார். இதில் 3 மாணவர்கள் காயம் அடைந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட அக்கல்லூரியின் முன்னாள் மாணவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் வாகன விபத்து ஒன்றில் சிக்கி கை உடைந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக போலீசார் காவல் நிலையத்தில் ரோகித்திடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் கல்லூரி நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் பழைய ஐடி கார்டை காட்டி ஓணம் பண்டிகை கொண்டாட கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்ததும், அப்போது மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறின்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுழற்றி மாணவர்களை தாக்கியதும் தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த ரோஹித், எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என சினிமா வசனத்தை பேசியதோடு, படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் கத்தி எடுத்ததால் தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டதாகவும், இந்த செயலுக்காக கடவுள் தன்னை பைக்கில் இருந்து கீழே விழ வைத்து கையை உடைத்து விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மாணவர்கள் படிக்கும் காலத்தில் பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் எனவும், தவறான செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் செல்ல வேண்டும் எனவும் முன்னாள் மாணவர் ரோகித் பேசும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil