பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
கோவை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரிபுத்தூரில் பல்லடம் - உடுமலை சாலையில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால், நடவு செய்த மக்காச்சோள பயிர்கள் கருகிப் போனதால் விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
செஞ்சேரிபுத்தூர், கம்மாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5000 ஏக்கருக்கு மேலான விவசாயிகள் பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். முதல் கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், இரண்டாம் கட்ட தண்ணீர் திறக்கப்படாததால் பயிர்கள் காய்ந்து போயின. ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வரை செலவழித்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுல்தான் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை சமாதானப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும் போது, பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும், பயிர் இழப்பிற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu