தேர்தலை மனதில் வைத்தே சிலிண்டர் விலை குறைப்பு : கோவை எம்.பி. நடராஜன் விமர்சனம்
பி.ஆர். நடராஜன்
கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மதியழகன் நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெள்ளியன்று திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சூலூர் பேரூராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட வையாபுரி வீதி, கதிரான் வீதி, ஆறுமுகம் வீதி, மாகாளி வீதி ஆகிய இடங்களில் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் வடிகால்கள் அமைத்தல் மற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி படகு துறையில் தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 51 சமுதாய நலக்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை பாதுகாக்கவும், உழைக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிடவும் தற்போதைய மாநில அரசை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் தினம் என்பதற்காக ஒன்றிய அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வந்து கொண்டே இருக்கிறது.
கடந்த காலங்களில் சிலிண்டருக்கு விலை உயர்வு மட்டுமே செய்து கொண்டிருந்த ஒன்றிய அரசு, நாடாளுமன்றத் தேர்தலை கண்டு அஞ்சுவதன் காரணமாகவே மகளிர் தினம் என்ற போர்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மக்களையும் அவர்களது பிரச்சனைகளையும் பார்ப்பது மட்டும் தான் என்னுடைய பணி, மாறாக தினமும் அண்ணாமலையை பார்ப்பது அல்ல. பொழுது போகாமல் அவர் இது போன்ற விமர்சனங்களை வைத்து வருகிறார் என பதிலளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu