பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையன் கைது..!

பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையன் கைது..!
X

கைது செய்யப்பட்டவர்

பெண்ணின் கை, கால்களை கட்டி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (45). கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். விஜயலட்சுமி சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள வீட்டில் தனது மகள் மகன்கள் ஜோதிஸ், ஹரீஸ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இதனிடையே அவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்துள்ளது. அப்பணிகளை அவிநாசி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் நடத்தி வரும் பாலாஜி பில்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் மூன்று நாட்களாக கட்டிட வேலைகள் நடந்து வந்துள்ளது. அப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்பவர் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11 ம் தேதியன்று விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பாபு அவரை செல்லோ டேப்பால் வாய், கை, கால்களை கட்டிப் போட்டுள்ளார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் பள்ளிக்குச் சென்றிருந்த விஜயலட்சுமியின் மகன் ஹரிஷ் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு வெளியில் தாழிடப்பட்டு இருந்துள்ளது. தனது மகன் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து வீட்டிற்குள் இருந்து விஜயலட்சுமி சத்தம் எழுப்பியுள்ளார். இதையடுத்து தனது அம்மாவை ஹரிஷ் அழைத்த போது, அவர் வெளியில் இருந்து கதவை திறந்து கொண்டு உள்ளே வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி கதவை திறந்து கொண்டு ஹரிஷ் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, விஜயலட்சுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டு அருகில் இருந்த ஹரிஷின் சித்தப்பாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மாலை நீலாம்பூரில் உள்ள புறக் காவல் நிலையம் அருகே தனிப்படை காவல் துறையினர் பாபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 18 1/4 சவரன் நகை, ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் பாபுவை ஆஜர்படுத்திய காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!