மது போதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் கைது..!

மது போதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் கைது..!
X

கைது செய்யப்பட்டவர்

தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், போதை தலைக்கேற வரதராஜனின் தங்கை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ஓடக்கல்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தலையில் காயங்களுடன் கிடப்பதாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி மாரப்பன் என்பவரது மகன் பரமசிவம் (28) என்பது தெரியவந்தது.

மேலும் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த பரமசிவம் சில மாதங்களாக பணிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டு, இரவு நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த நிலையில், ஓடக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் விசாரணையில் பரமசிவம் குடிபோதையில் தன் தங்கையை தவறாக பேசியதால், பரமசிவத்தை கல்லால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று பரமசிவம் தனது நண்பர்களான பார்த்திபன் மற்றும் வரதராஜன் ஆகியோருடன் மது அருந்த சென்ற நிலையில், பார்த்திபன் மட்டும் வீடு திரும்பி உள்ளார். பரமசிவமும், வரதராஜனும் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், போதை தலைக்கேற வரதராஜனின் தங்கை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன் பரமசிவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது வரதராஜன் அருகில் இருந்த கல்லை எடுத்து பரமசிவத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பரமசிவம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற வரதராஜன் கடந்த சில தினங்களாக வதம்பச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்த நிலையில் சுல்தான்பேட்டை காவல் துறையினர் பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்