கோவை அருகே தீ விபத்தில் 3 பேர் பலி :போலீசார் விசாரணை

கோவை அருகே தீ விபத்தில் 3 பேர் பலி :போலீசார் விசாரணை
X

தீ விபத்து ஏற்பட்ட இடம்.

எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அழகுராஜா, முத்துக்குமார் ஆகியோர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனிலும், மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இவர்கள் தங்கியிருந்த அறையின் நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது, ஒரு பகுதியில் கேஸ் அடுப்பு வைத்து ஒருவர் சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழகுராஜா என்பவர், 10 லிட்டர் கேனில் இருந்த பெட்ரோலை ஒரு லிட்டர் கேனில் ஊற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் கொட்டி அருகில் இருந்த அடுப்பின் மீது கொட்டி, தீ பரவியுள்ளது. இதில் அறை முழுவதும் தீ பரவி, 7 பேர் மீதும் தீப்பிடித்துள்ளது. அனைவரும் அலறித் துடித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் வருவதற்குள், அழகுராஜா, முத்துக்குமார், சின்னக்கருப்பு ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த பாண்டீஸ்வரன், மனோஜ், வீரமணி, தினேஷ் ஆகிய நால்வரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா