கோவையில் நாளை துவங்கும் கேலோ இந்தியா போட்டிகள் - ஆயத்த பணிகள் தீவிரம்
பிஎஸ்ஜி உள்விளையாட்டு அரங்கம்
ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.. தமிழ்நாடு மாநிலம் சார்பாக கூடைப்பந்து, கால்பந்து கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர்களும் பங்கேற்றுள்ளனர். தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகள் கோவையில் நாளை துவங்குகிறது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை முதல் 30 ம் தேதி வரை தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் இன்று முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை முதல் 25 ஆம் தேதி வரை கூடைப்பந்து போட்டிகளும், 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தாங்டா போட்டிகளும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கான தங்கும் இடம், உணவு, போக்குவரத்து ஆகிய வசதிகளை மாநில மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைப்புகள் உருவாக்கியுள்ளன. இந்த விளையாட்டுகளை காண்பதற்காக பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 100 க்கும் மேற்பட்ட மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu