மனைவி, மகள்களை கொலை செய்த கணவர் கைது..!

மனைவி, மகள்களை கொலை செய்த கணவர் கைது..!
X

மனைவி மகளுடன் தங்கராஜ்(பழைய படம்)

தங்கராஜ் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே தங்கராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே நாள்தோறும் வாக்குவாதம் சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாகவும், ஒரு குழந்தையை மீட்ட நிலையில் இன்னொரு குழந்தை மற்றும் மனைவியை மேலே எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்றும் அணுகியுள்ளார்.

தங்கராஜ் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புஷ்பா, ஹரிணி, ஷிவானி ஆகிய மூன்று பேரின் உடல்களையும் மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தங்கராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தங்கராஜ் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் புஷ்பா பணம் தர மறுத்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கராஜ் கோபத்தில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி உள்ளார். ஹரிணியை மீட்பதற்கு புஷ்பா தண்ணீர் தொட்டிக்குள் குதித்த நிலையில், தங்கராஜ் இளைய மகளான சிவானியையும் தொட்டிக்குள் வீசி தொட்டியை மூடியுள்ளார். இதில் மூன்று பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தங்கராஜ் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!