கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார்

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார்
X

கஞ்சா கும்பல் குறித்து புகார் அளிக்க வந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர்.

கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதி எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் வசித்து வருபவர் வீரலட்சுமி. வீரலட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், சில நேரங்களில் அங்கு வருபவர்களிடம் இளைஞர்கள் பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீரலட்சுமியின் மகன்களை சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் வழிமறைத்து பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டதாகவும் அப்போது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.

இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்பனை செய்யும் அந்த இளைஞர்கள் வீரலட்சுமியையும் அவரது இரண்டு மகன்களையும் மிரட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கு அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வீரலட்சுமியின் இல்லத்திற்கு ஆயுதங்களுடன் சென்ற இளைஞர்கள் வீரலட்சுமியின் குடும்பத்தினரை தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வீரலட்சுமி குடும்பத்தாரும் சுதாரித்து கொண்டதால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

எனினும் அக்கும்பல் தொடர்ந்து வீரலட்சுமியின் இல்லத்தை நோட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வீரலட்சுமி மனு அளித்துள்ளார். மேலும் அந்த இளைஞர்கள் ஆயுதங்களுடன் வீட்டை நோட்டமிடும் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.

Tags

Next Story