பாஜகவிற்கு ஒத்து ஊத கூடிய கட்சியாக அதிமுக இருக்கிறது : அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பாஜகவிற்கு ஒத்து ஊத கூடிய கட்சியாக அதிமுக இருக்கிறது : அன்பில் மகேஷ் பொய்யாமொழி
X

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாநில உரிமைகளுக்கு எதிராக இப்பவும் வாயை திறக்க மாட்டேன் என்கிறார்கள்.

கோவை கொடிசியா மைதானத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அன்புமணி மகேஷ் பொய்யாமொழி, “இன்று பாசிசம் சரிய ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் நம்முடைய முதல்வர் தான். 33 மாதங்களில் 1339 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்தது திராவிட மாடல் அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்பதை செய்து காட்டியவர் முதல்வர் ஸ்டாலின். கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் என்று நம்மை காட்ட பாசிசம் முயற்சிக்கிறது. அதை முறியடிக்க வேண்டும். பாஜகவிற்கு ஒத்து ஊத கூடிய கட்சியாக இருந்தது அதிமுக. மாநில உரிமைகளுக்கு எதிராக இப்பவும் வாயை திறக்க மாட்டேன் என்கிறார்கள். இன்னும் துணிந்து அவர்கள் பா.ஜ.கவை எதிர்க்கவில்லை. நம் மீது வழக்கு போட்டு விடுவார்களோ என்ற பயம் அதிமுகவினருக்கு இருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொருளாதாரத்தை ஈட்டி தரக்கூடிய மாவட்டமாக கோவை இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசிடம் மாநில வளர்ச்சிக்காக நிதியை கேட்கும் பொழுதெல்லாம் நிதியை கொடுக்க மாட்டேன் என்கின்றனர். எங்களுக்கு ஓட்டு போடாத தமிழகத்திற்கு நிதி கிடையாது என்கின்றனர். மாநில அரசு என்ன எழுதித் தருகிறதோ அதை படித்து விட்டு அமர வேண்டியதுதான் ஆளுநரின் வேலை. ஆனால் அதை படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு உட்காருகிறார். மிக்ஜாம் புயலின் பொழுதுஏற்பட்ட பாதிப்பினை சரி செய்ய நிதி தேவைப்படுகிறது. ஒன்றிய அரசிடம் கேட்டிருக்கிறோம் அவர்கள் தருவார்கள் என்று நம்புகிறோம் என்று தான் ஆளுநர் உரையில் எழுதியிருந்தோம். மத்திய அரசை குறை கூட சொல்லவில்லை. ஆனால் மிங்ஜாம் புயலுக்கு நிதி கொடுக்கவில்லை என்ற ஒரு வார்த்தை இருப்பதால் கவர்னர் அதை படிக்க மாட்டேன் என்கிறார்.

நாங்கள் சொன்னபடி ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோம். ஆனால் 15 லட்சம் கொடுப்பேன் என்று 10 ஆண்டுக்கு முன்பு சொன்ன பாஜக கொடுத்தார்களா? ஏன் 15 லட்சம் கொடுக்கவில்லை என பா.ஜ.க.வினர் வரும் போது கேளுங்கள். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர். முப்பதாயிரம் கண்ணீர் புகை குண்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கின்றனராம். எங்கே தொலைத்தோமே அங்கு தான் தேட வேண்டும். தேடுவதற்காக நாங்கள் கோவை வந்திருக்கிறோம். வெற்றியை ஈட்டு தர வேண்டியது வந்திருக்கும் ஒவ்வொருவரின் கடமை. 2024 தேர்தல் என்பது இனி மாநில கட்சிகளுக்கு தேர்தல் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பக் கூடிய தேர்தல். அரசியல் அமைப்பு சட்டம் இருக்குமா என்று கேள்வி கேட்கக்கூடிய தேர்தல். மகளிருக்கு கொடுத்து வரும் ஆயிரம் ரூபாயினை கூட நாளை ஆட்சிக்கு வந்தால் பணம் கொடுப்பதை கூட நிறுத்தி விடுவார்கள். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கூட பெறாது என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்