கோவையில் வயிற்று வலியால் 6 வயது சிறுமி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

கோவையில் வயிற்று வலியால் 6 வயது சிறுமி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

பைல் படம்

வயிற்று வலி ஏற்பட்டு 6 வயது பள்ளி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த ராஜாமணி, புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களது ஆறு வயது மகள் தியா ஸ்ரீ, ஐயர் லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். தியா ஸ்ரீ கடந்த 5 ஆம்தேதி இரவு வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

முதலுதவி சிகிச்சையாக ஓம வாட்டர் கொடுத்த பெற்றோர், பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடல்நிலை மோசமான சூழலில் சிகிச்சையில் இருந்த தியா ஸ்ரீக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ள பெற்றோர், அதே சமயம் மருத்துவ ரீதியிலான காரணங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தங்கள் மகள் பள்ளியில் கொடுக்கும் FERROUS SULPHATE & FOLIC ACID மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்ற தகவலையும் தெரிவித்து இருக்கின்றனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் மற்றும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்து மாத்திரையை அப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களாகிய தங்களிடம் வழங்காமல், நேரடியாக தங்களது மகளுக்கு வழங்கியதால், அந்த சத்து மாத்திரையை சாக்லேட் மிட்டாய் போல் அதிகமாக சாப்பிட்ட நிலையில், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு நாட்களில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக அம்மாணவியின் தாயார் பேட்டியளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது மகள் தியாஸ்ரீ-யின் மரணம் குறித்து மருத்துவ ரீதியாக காரணம் அறிய ராஜாமணி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்து மாத்திரைகளை பெற்றோர்களிடம் வழங்கி, பெற்றோர்களது கண்காணிப்பில் குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் இந்த விடியா திமுக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தால் இந்த அகால மரணம் நிகழ்ந்திருக்காது.

இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க இந்த விடியா திமுக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரையை வழங்கி, மாணவி தியா ஸ்ரீ-ன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், குழந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் வாடும் பெற்றோருக்கு அதிகபட்ச இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்கவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil