1021 மருத்துவர்களுக்கு நாளை மறுதினம் பணி ஆணைகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோவை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர்களுக்கான பணி நியமனங்கள் நடைபெற உள்ளது. அதற்காக ஏற்கனவே சான்றிதழ் சரி பார்க்கும் பணி முடிவடைந்த நிலையில் நேற்றும் இன்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கலந்தாய்வு என்பது இதுவே முதல் முறை. தமிழகத்தில் 20 மருத்துவ மாவட்டங்களில் எங்கே எல்லாம் அதிக காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மருத்துவர்களை பணியில் அமர்த்திட வேண்டும் என்ற அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வாகியுள்ள 1021 பேரை 20 மாவட்டங்களில் காலி பணியிடங்கள் என்று கண்டறியப்பட்டு வெளிப்படையாக காலிப்பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 1127 பணியிடங்களில் நியமிக்கும் வகையிலான கவுன்சிலிங் நடைபெற்றுள்ளது.
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருந்தாளுனர்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அவர்கள் கொரோனா காலகட்டத்திற்கான மெரிட் மதிப்பெண்கள் கேட்டுள்ளதால் அதற்காக அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருந்தாளுநர்கள் கொரோனா காலத்தில் வெளியில் இருந்து பணியாற்றாதவர்கள் என்பதால் இவர்களுக்கு மெரிட் மதிப்பெண் கொடுத்தால் அது அநீதியாக மாறிவிடும் என்பதற்காகவே நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில் அப்பிரச்சினை முடிந்தவுடன் இதற்கான பட்டியலும் வெளியிடப்படும்.
2300 செவிலியர்கள் எம்.ஆர்.பி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டவர்கள். சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக அப்பணியிடங்களில் அவர்களை கொண்டு நிரப்பப்படும். ஒருவர் கூட விட்டுப் போக கூடாது என முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி எம்ஆர்பியில் சேர்ந்தவர்கள் என்பதற்காக காலி பணியிடங்கள் உருவாகும் போது அவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிட பணிகள் இன்னும் முடியாத நிலையில் பொதுப்பணித்துறையினர் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளனர். அந்த பணிகள் முடிந்தவுடன் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக விமான நிலைய வளாகத்தில் வைத்து மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்காக காத்திருக்கும் மருந்தாளுநர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கையில் குழந்தையுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து தங்களுக்கு பணி ஆணை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu