பொள்ளாச்சி பாரதிய ஜனதா மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற வானதி சீனிவாசன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. மகளிர் பிரதிநிதிகள் மாநாடு வடக்கிபாளையம் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலே சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. அதில் மத்திய அரசு போதிய நிதி உதவி அளிக்கவில்லை என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை என்னென்ன திட்டங்களுக்கு மத்திய அரசு எத்தனை நிதி கொடுத்திருக்கிறது என்பதை வெளிப்படையாக இந்த அரசு அறிக்கையாக கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
கிராமப்புறத்தில் இருக்கின்ற விவசாயிகளுடைய வங்கி கணக்கிலே 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது. முத்ரா திட்டத்தில் அதிகமாக கடன் பெற்று இருப்பது தமிழகத்தைச் சார்ந்த பெண்கள். ரேஷன் கடைகளிலே இலவசமாக அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதைப்பற்றி எல்லாம் பேச மாட்டேன் என்கிறார்கள். பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது. சட்டப்பேரவையில் நான் பேசுகின்ற பொழுது, வாடல் நோயால் தென்னைகள் பாதிக்கப்பட்டு பல இடங்களில் விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டும் அவலம் நடந்து வருகிறது. தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக தென்னை விவசாயம் இன்று லாபகரமாக இல்லை. ஆகவே தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் இன்று முதல்வரானதும் அதைப் பற்றி பரிசீலிக்கவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான ஒரு மனநிலை மக்களுக்கு இப்போது வந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு பலமிக்க கூட்டணியாக இங்கு அமையும் அதன் வாயிலாக 2024ல் மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்கின்ற போது தமிழகத்தில் இருந்தும் கனிசமான எம்.பி. க்கள் பா.ஜ.க. சார்பில் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu