ஆணவகொலைக்கு தடுப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன்
ஆணவகொலைக்கு தடுப்புச்சட்டம் கொண்டு வருவது என்பது முதல் படி அப்படி ஒரு சட்டம் இருந்தால் அந்த சட்டத்தின்கீழ் கைதானால் தான் தப்பிக்க முடியாது என்கிற ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும் என்றார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன்.
பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது: அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம், அருளபதி கிராமத்தில் ஆணவக் கொலை இரண்டு பேர் கொடூரமாக தூங்கும்போதே கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெற்ற தாயையும் , பெற்ற மகனையும் கூட உறங்கும்போது கொள்ளக்கூடிய அளவிற்கு சாதி இங்கே மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆணவக் கொலைகள் கண்டிக்கிற வகையிலும், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை ஏற்றவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிற வகையிலும் 22 -ஆம் தேதி கிருஷ்ணகிரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அந்த வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றாலும் கூட இது போன்ற சாதிய ஆணவ படுகொலைகள் தொடரக்கூடாது. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தனிச் சட்டம் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்திருக்கிறது.
ஆணவக்கொலைக்கு தடுப்புச்சட்டம் கொண்டு வருவது என்பது முதல் படி. அப்படி ஒரு சட்டம் இருந்தால் அந்த சட்டத்தின்கீழ் கைதானால் தான் தப்பிக்க முடியாது என்கிற ஒரு விழிப்புணர்வு ஏற்படும். அப்போதுதான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். வெகு மக்களிடத்திலே இந்த ஆணவக் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்கெனவே மண்டி கிடைக்கிறது. ஆனாலும் அவற்றை முறைப்படுத்துவதற்கு, இங்கு சட்டம் இல்லை என்பதுதான் மிகப்பெரிய குறையாக உள்ளது.
ஆகவேதான், நாங்கள் திரும்ப திரும்ப சட்டம் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்திய ஒன்றிய அரசும் சட்டம் கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகிறது. மாநில அரசும் இதில் தயக்கமின்றி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக இருக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முதல்வர் இந்த ஆணவக் கொலைகளை தடுப்பதற்குரிய சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்ட கேள்விக்கு, அரசியலுக்கு வருவதும் வராது அவரவர் தனிப்பட்ட உரிமை, விவகாரம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா... வரமாட்டாரா... என்பதை ஊடகங்கள் தான் எங்களுக்கு சொல்ல வேண்டும். எங்களுக்கு யூகத்தின் அடிப்படையிலே பதில் சொல்ல இயலாது. ஆனால் ஜனநாயகத்தில் யாரும் கட்சியை தொடங்கலாம். யாரும் பொது வாழ்வில் ஈடுபடலாம். அதில் எனக்கு எந்த முரணும் இல்லை. கனிம வளங்களை பாதுகாக் கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் களத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளோடு இணைந்து தொடர்ந்து உறுதியாக நின்று குரல் கொடுப்போம் என்றார் திருமாவளவன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu