எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் : பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் : பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை
X

பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி - கோட்டூர் சாலையில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஆறு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற் குடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ரிப்பன் வெட்டி நிழற்குடையை பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவு தோல்வி என சொல்ல முடியாது. கடந்த 2011 ம் ஆண்டில் இருந்து 2021 வரை திமுக எங்கே இருந்தது என தெரியாமல் இருந்தது. 2021-ல் திமுக திடீரென ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. அதில் அதிமுக விதி விலக்கு இல்லை. இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் அதிமுக மிகப்பெரிய கட்சி. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்.அவருடைய நான்காண்டு கால ஆட்சியை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். எனவே அவருக்கு நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெறும்.

திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதிமுகவினர் திமுகவில் இணைந்தால் திமுக இரட்டிப்பு பலம் பெறும் என கூறியுள்ளார். திமுக என்றாலே மிகப் பெரிய ஊழல் கட்சி. திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக. மக்களுக்கு திமுகவின் ஊழல்கள் தான் தெரியும். அதிமுக ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம். அதிமுகவினர் திமுகவில் இணையும் நிர்ப்பந்தமான சூழல் ஒருபோதும் ஏற்படாது.

கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் பல படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கொலைகள் நடைபெறுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியார் ஆட்சியில் தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அதற்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!