திமுகவின் முக்கிய புள்ளிகள் ஜாபர் சாதிக்கிடம் பணம் பெற்றுள்ளனர் : பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
பொள்ளாச்சி ஜெயராமன்
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், போதைப் பொருள் கடத்தல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. குறிப்பாக சென்னை அதன் மையமாக செயல்படுகிறது. நேற்று முன்தினம் 100 கிலோ கஞ்சா சென்னையிலும், புதுக்கோட்டையில் 81 கிலோ போதை பொருள் மற்றும் 180 கிலோ கஞ்சா மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்தனர். இது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது.
இவற்றை தமிழக போலீசார் பிடிக்கவில்லை. டெல்லியில் 2 ஆயிரம் கிலோ உயர்ரக போதை பொருள் பிடிக்கப்பட்டது. இதில் சினிமா தயாரிப்பாளரும் கடத்தல் புள்ளியுமான ஜாபர் சாதிக் ஈடுபட்டது தெரியவந்து. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி, ஜாபர் சாதிக் மூலம் படம் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் குடும்பத்துக்கு காட் பாதராக ஜாஃபர் சாதிக் செயல்பட்டு வந்துள்ளார். இதில் திமுகவின் முக்கிய புள்ளிகள் ஜாபர் சாதிக்கிடம் பணம் பெற்றுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகரில் அரசு பள்ளி மாணவர்களிடம் சோதனை செய்ததில் 750 கஞ்சா பொட்டலங்கள் பிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மத்தியில் ஆளும் அரசு திமுக அரசே வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லதொரு ஆட்சி அமைக்கப்பட்டு போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu